"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Heliconia Garden – Introduction – Part 1

Heliconia Garden – Introduction – Part 1

ஹெலிகோனியம் – அறிமுகம்

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே …
 வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
”

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நம்பிக்கையை செதுக்கிய வரிகள்.

இயற்கை செதுக்கிய சிற்பங்களான இந்த மலர்களைக் கண்டு மயங்காதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்.

அவ்வாறான மலர்களில் ரம்மியமான தோற்றத்தைக்கொண்ட “ஹெலிகோனியம்” என்று அழைக்கப்படும் மலர்களைப்பற்றி நீங்கள் என்றாவது கேள்விப்பட்டதுண்டா?..

ஒரு வாரமானாலும் வாடாமலும், இதழ் மூடாமலும் தொடர்ந்து புன்னகைத்தபடி காட்சி தரும் அழகிய மலர்களை தருவதுதான் “ஹெலிகோனியம்” (Heliconia) என்னும் தாவரமாகும். அந்த தாவரத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

Contents – பொருளடக்கம். ⇅

இந்த ஹெலிகோனியம் (Heliconia) தாவரத்தையும் அதில் மலரும் மலர்களையும் நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கக்கூடும்.

ஹெலிகோனியா என்பது ஹெலிகோனியேசியே (Heliconiaceae) என்ற தாவரகுடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான வெப்பமண்டல பூக்கும் தாவரமாகும்.

தமிழில் இது பொதுவாக அதன் வடிவத்தைக் கொண்டு “கிளிமூக்கு செடி” மற்றும் “நண்டு கால் செடி” (Lobster-claw) என்று அழைக்கப்படுகிறது.

இந்தவகை தாவரத்தில் சுமார் 200 க்கும் அதிகமான இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான கவர்ச்சிகரமான மலர்களை காட்சிப்படுத்துவது ஆச்சரியமே.

இந்த அனைத்து வகையான மலர்களையும் நீங்கள் பார்த்திருக்கும் வாய்ப்பு மிக அரிதே. ஆனாலும் இதில் சிலவகை மலர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். பார்த்தது மட்டுமல்ல அதன் அழகில் மனதை பறிகொடுத்திருக்கவும்கூடும்.

இப்பதிவில் நீங்கள் பார்த்த மற்றும் பார்க்கப்படாத பலவகையான ஹெலிகோனிய மலர்களைப்பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு இதோ “ஹெலிகோனியா கார்டன்” என்னும் இந்த எழில் கொஞ்சும் தோட்டத்திற்குள் உங்களை அழைத்துச்செல்ல போகின்றோம் வாருங்கள்.

முன்பு எப்போதும் பார்க்காத ஹெலிகோனிய தாவர வகைகளையும், அதில் பூத்துக்குலுங்கும் விதவிதமான மலர்களின் புன்னகையையும் பார்த்து ரசிப்போமா?!!

Heliconia Varieties

மலர்களின் புன்னகையை தரிசிப்பதற்கு முன்னால் தாவரத்தைப்பற்றிய சில அடிப்படை தகவல்களை “Heliconia Introduction – ஹெலிகோனியம் அறிமுகம்” என்னும் இப்பதிவில் முதலில் பார்க்கலாம் வாருங்கள்..

Heliconia Garden – Introduction – Part 1 – கொய்மலர்

Heliconia Garden – Introduction – Part 1. கொய்மலர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?…

கொய்மலர் என்றால் “கொய்த மலர்” என்று பொருள். “கொய்த” என்றால் தாவரத்திலிருந்து “தண்டுடன் பறித்த” என்று பொருள்.

கொய்மலர்கள் என்பவை திருவிழாக்கள், திருமண மேடைகள், ஹோட்டல் வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் பொது மேடைகள் முதலியவைகளை அழகுபடுத்த பயன்படுத்தப்படும் பலவகையான அலங்கார மலர்களைக் குறிப்பவை.

மேலும், சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக கொடுக்கப்படும் பொக்கே (Bouquet) என்னும் மலர்கொத்துகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

Heliconia Garden - Introduction - Part 1 Bouquet

பொதுவாக கொய்மலர்கள் தயாரிக்க ஓரிரு நாட்கள்வரை வாடாமலே இருக்கும் மலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஹெலிகோனியம் என்னும் இத்தாவரம் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் அதேவேளையில் “கொய்மலர்” (koymalar) என்று சொல்லப்படும் அலங்காரப்பூவுகளுக்காகவும் பணப்பயிராக விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

இதன் பூக்கள் செடிகளிலிருந்து பறித்த பின்பும் நெடுநாட்கள் வாடாமல் இருப்பதால் பூங்கொத்துக்கள் (Bouquets) தயாரிப்பதற்கும், மலர் அலங்காரங்களுக்கும் (Cut Flowers) வணிகரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

ஹெலிகோனியம் மலர்கள் அவைகளின் வடிவங்கள் மற்றும் கவர்ச்சியான வண்ணங்களினால் மலர் அலங்காரங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.

இதன் பூக்கள் சிகப்பு (Red), ஆரஞ்சு (Orange), பச்சை (Green), மஞ்சள் (Yellow) என பல வகைகளில் காணப்படுகின்றன.

மேடை அலங்காரத்திற்காக மட்டுமல்ல வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் முகப்புகளில் அலங்காரச் செடிகளாகவும் வளர்க்கப்படுகின்றன.

பூங்காக்களிலும் நந்தவனங்களிலும் அழகு செடிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இரம்மியமான அழகைக்கொண்டுள்ள “ஹெலிகோனியம்” என்னும் தாவரத்தைப்பற்றியும் அதன் மனதை மயக்கும் மலரைப்பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

HELICONIA – அடிப்படைத்தகவல்கள்

பெயர் :- ஹெலிகோனியம்.

இனப்பிரிவு :- தாவரம் (Plant).

தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் (Angiosperms).

தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா (Heliconia).

பெயர்க்காரணம் :- “ஹெலிகோனியம்” என்பது ஒரு கிரேக்க சொல். கிரேக்கத்தில் உள்ள  “ஹெலிகான்” என்னும் மலையை குறிக்கும் சொல்.

இந்த மலையில் வசிக்கும் தேவதை அழகாகவும், கவர்ச்சியாகவும், எப்போதும் இளமையாகவும் இருப்பதாக நம்பிக்கை. அதேபோல் இந்த செடியில் மலரும் பூக்களும் அந்த தேவதையைப்போலவே அழகாகவும், கவர்ச்சியாகவும், நீண்ட நாட்கள் வாடாமல் இளமையாகவே இருப்பதால் தேவதை வசிக்கும் அம்மலையின் பெயரையே “ஹெலிகோனியம்” என இதற்கும் வைத்துவிட்டனர்.

ஆங்கில பெயர்கள் :- Parakeet flower, lobsters claws, Parrot flower, Parrot plantain, false plantain.

தமிழ் பெயர்கள் :- கிளி வாழை. பூ வாழை, கிளிமூக்கு செடி, நண்டுகால் செடி. இதன் இலைகள் வாழை இலைகளை ஒத்து இருப்பதால் சிலர் இதனை காட்டுவாழை, பொய்வாழை எனவும் அழைக்கின்றனர்.

வேறுபெயர்கள் :- தமிழில் இத்தாவரம் கிளி வாழை, பொய் வாழை, காட்டுவாழை, பூக்கும் வாழை, மக்கா மலர் என பலவகையான பெயர்களில்  அழைக்கப்படுகிறது. தமிழில் பலபெயர்கள் இருந்தாலும் பொதுவாக அனைவராலும் “ஹெலிகோனியம்” என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

தாயகம் :- பெரும்பாலான சிற்றின வகைகள் மத்திய அமெரிக்கா (Central America) மற்றும் தென் அமெரிக்கா (South America) விலுள்ள வெப்பமண்டல காடுகளைப் பூர்வீகமாக கொண்டவை. இவைகள் புளோரிடா (Florida), கோஸ்டாரிகா (Costa Rica) முதலிய இடங்களில் தன்னிச்சையாகவே வளர்கின்றன.

சில சிற்றினங்கள் காம்பியா(Gambia), தாய்லாந்து (Thailand) நாடுகளை பூர்வீகமாக கொண்டவை. மேலும் சிலவகைகள் மேற்கு பசிபிக் தீவுகளையும், இந்தோனேசிய மாகாணமான மாலுகு (Maluku) வையும் பூர்வீகமாகக் கொண்டவை.

தோற்றம் :- இது எப்போது தோன்றியது என்பதனை சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கூட சுமார் 39 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னால் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

வரிசை :- ஜிஞ்சிபெரேல்ஸ் (Zingiberales).

பேரினம் :- ஹெலிகோனியா – Heliconia.

சிற்றினங்கள்:- ஹெலிகோனியா பேரினத்தில் ஏறக்குறைய 200 சிற்றினங்கள்வரை உள்ளன. இதில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சில கலப்பினங்களும் உள்ளன. மேலும் வகைப்படுத்தப்படாத பல இனங்களும் உள்ளன.

குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

Family heritage – குடும்ப பாரம்பரியம்

Heliconia Garden – Introduction – Part 1. இதிலுள்ள பல்வேறு இனங்களை பார்வையிடுவதற்கு முன்னால் ஹெலிகோனியாவின் குடும்ப பாரம்பரியத்தை கொஞ்சம் இந்த பதிவில் அறிந்துகொள்வது அவசியம். ஏனென்றால்… வரலாறு முக்கியம் அமைச்சரே!!

பொதுவாக தாவரவியல் துறையில் ஒரே இயல்பு மற்றும் பண்புகள் கொண்ட பலவகை தாவரங்கள் ஒரே குடும்பமாக தொகுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த “ஹெலிகோனியா” (Heliconia) என்னும் குடும்பத்தில் ஒன்லி ஹெலிகோனிய வகை தாவரங்களுக்கு மட்டுமே அனுமதி.

ஹெலிகோனியாவில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளன. இந்த இருநூறு இன தாவரங்களுக்கு மட்டுமே ஹெலிகோனிய குடும்பத்தில் குடும்ப உறுப்பினராக நீடிக்கும் தகுதி உண்டு. வெளியிலிருந்து வேறு யாராவது நானும் உன் தூரத்து சொந்தம்தான் என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் வர முயற்சி செய்தால் விளையாட்டு விபரீதமாகி முடிவில் வெட்டுக்குத்தில் போய் நின்றுவிடும்.

உண்மைதான், தன்னுடைய குடும்பத்தில் தன்னுடைய இரத்த உறவான கெலிகோனியாக்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து தங்களுடைய பரம்பரையின் பாரம்பரியத்தை இம்மியளவுகூட பிசகாமல் இன்றளவும் கட்டிக்காத்துவருகின்றன இந்த ஹெலிகோனியாக்கள்!!!

பெரும்பாலான கெலிகோனியாக்கள் வாழைமரம் போலவே காட்சி தருகின்றன. இலைகளும் அச்சு அசலாக வாழை இலைபோலவே இருக்கின்றன!!

ஆம்,.. இலைகள் வாழை மற்றும் இஞ்சி செடிகளின் இலைகளை ஒத்ததாக இருக்கின்றன.

Heliconia leaf

வாழையும், இஞ்சியும் “Musaceae” [முசேசி] என்னும் குடும்பத்தை சேர்ந்தது.

இந்த ஹெலிகோனியாவின் இலைகளும் வாழை மற்றும் இஞ்சி இலைகள் போலவே இருப்பதால் விஞ்ஞானிகள் ஆரம்ப கட்டத்தில் இதனையும் “Musaceae” குடும்பத்தில்தான் வைத்திருந்தனர்.

ஆனால் இதன் பிற பண்புகளில் பல்வேறு குழப்பங்கள் நிலவியதால் நமக்கு எதற்கு வம்பு என்று விஞ்ஞானிகள் இதனை வாழை குடுப்பத்திலிருந்து பிரித்து “Heliconiaceae” என்ற ஒரு புதிய குடும்பத்தை உருவாக்குவதாக அறிவித்து 2003 ம் ஆண்டில் தனிக்குடித்தனம் அனுப்பிவிட்டனர்.

இலைகள் ஒன்றுபோல் இருந்த பின்பும்கூட ஏன் இந்த விஞ்ஞானிகள் வாழை குடும்பத்திலிருந்து ஹெலிகோனியாவை மட்டும் தனியாக பிரித்தனர் என எண்ணத் தோன்றுகிறதா?

ம்..ம்ம்… இலைகள் ஒன்றுபோல இருந்தால் என்ன?.. பூக்களில்தான் நிறைய வேறுபாடுகள் உள்ளதே.. பூக்கள் மட்டுமா.. காய்களும்தான் மேட்ச் ஆகவில்லையே!..

இலைகள் ஒன்றாக உள்ளது என்பதற்காக எல்லோராலும் “சூனா பானா” ஆகிவிடமுடியுமா என்ன?

பரம்பரையை பின்னுக்குத்தள்ளிவிட்டு பழக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்தால்… இத்தனைநாள் கட்டிக்காத்துவந்த குடும்ப பாரம்பரியத்தை வெட்டிசாய்த்ததுபோல் ஆகிவிடாதா?

எனவேதான், பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும்கூட வாழைமரத்திற்கு ஹெலிகோனியா குடும்பத்துடன் ஒட்டிஉறவாட அனுமதி இல்லை.

ஹெலிகோனியேசியே (Heliconiaceae) குடும்பத்தில் ஹெலிகோனிய இனங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. வேறு எந்த தாவரத்திற்கும் இடமில்லை. ஆக, நவநாகரீக மனிதர்களைப்போல இதுவும் கூட்டுக்குடும்பத்தை விரும்பவில்லை போலும்.

சரி, குடும்ப பாரம்பரியத்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் போதுமா?!… குடும்பத்திலுள்ள உறுப்பினர்களைப் பற்றியும் பார்க்க வேண்டாமா?! எனவே,… குடும்ப பெருமையை ஓரமாக வைத்து விட்டு பிற விசயங்களை பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்.

ஹெலிகோனியேசியே (Heliconiaceae) குடும்பத்திலுள்ள ஒரே பேரினம் இந்த ஹெலிகோனியா மட்டும்தான்.

சிற்றினங்களின் வகைகள்

அதன் தன்மைகள் மற்றும் வெவ்வேறு பண்புகளைப் பொறுத்து அதன் வகைகள் வேறுபடுத்தப்படுகின்றன.

அமெரிக்காவிலும், மேற்குபசிபிக் பகுதிகளிலும் சுமார் 120 வகைகள் காணக்கிடைக்கின்றன.

இதில் சிறிய மாற்றங்களுடன் பல கலப்பினங்கள் உள்ளதால் பெயர் வைப்பதில் மற்றும் வேறுபடுத்திப்பார்ப்பதில் குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதவையாக உள்ளன.

2003 ம் ஆண்டு வரையில் கூட்டுக்குடும்பமாக வாழையோடு வாழையாக வாழ்ந்துகொண்டிருந்த இதனை வலுக்கட்டாயமாக பிரித்து தனிக்குடித்தனம் அனுப்பி வைத்த விஞ்ஞானிகளே ஹெலிகோனியத்தின் வகைகளை அதாவது சிற்றினங்களை பிரித்தறிவதில் மகா குழப்பத்தில் உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தாவரத்தின் பண்புகள்

இவைகள் அதன் வகைகளை பொறுத்து 0.5 மீ முதல் கிட்டத்தட்ட 4.5 மீ (1.5 – 15 அடி) உயரம் வரை வளர்கின்றன.

மஞ்சள், இஞ்சி இவைகளைப்போல இதுவும் தடித்த வேர்களை (கிழங்கு போன்ற அமைப்பு) கொண்டுள்ளன. இந்த வேர்களில் கிளைக்கும் கன்றுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனத்தை பெருக்குகின்றன.

தாய் தாவரம் பூக்க ஆரம்பித்தவுடன் அதன் கிழங்கிலிருந்து பல்வேறு சேய் செடிகள் துளிர்விட ஆரம்பிக்கின்றன. வளர்ந்த தாவரங்கள் ஒவ்வொன்றும் நாணலின் தண்டினைப்போன்று தடித்த தண்டினை கொண்டுள்ளன.

இலைகளின் தன்மை

இவைகளின் இலைகள் வாழை, இஞ்சி, மஞ்சள் இலைகளைப்போல நீள்வட்டவடிவ தோற்றம் கொண்டவையாக உள்ளன.

சிலவகை இனங்கள் சிறிய இலைகளையும், இன்னும் சில வாழை மரத்திற்கு இருப்பதுபோன்ற பெரிய இலைகளையும் கொண்டுள்ளன.

இலைகள் பொதுவாக 15 – 300 செ.மீ (6 இன்ச் முதல் 10 அடி) வரை நீளம் கொண்டவை.

பொதுவாக இலைகள் இரு பக்கங்களிலும் பச்சை நிறங்களை கொண்டுள்ளன. சிலவகை தாவரங்கள் அடிப்பகுதியில் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தை கொண்டுள்ளன.

இலைகளில் வாழிடம்

இந்த ஹெலிகோனியாவின் இலைகள் பல உயிரினங்கள் தங்குவதற்கு இடம் அமைத்து கொடுக்கின்றன. ஆம், பலவகையான சிலந்திகள் (Spider), தவளைகள் (Frogs) மற்றும் வௌவால்களுக்கு (Bats) கூட மறைந்து வாழ இடம்கொடுத்து உதவுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் ஒருவித சிறிய வெள்ளை வௌவால்கள் இந்த இலைகளை தங்களுடைய வசிப்பிடமாக மாற்றிக்கொள்கின்றன.

Heliconia-bats

கருப்பு நிறமான ஒருவகை பட்டாம்பூச்சிகள் தங்களுடைய முட்டைகளை இதன் இலைகளில் ஒட்டவைக்கின்றன. அதிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் இந்த இலைகளை தின்றே கூட்டுப்புழுக்களாக மாற்றமடைந்து அதன்பின் பட்டாம்பூச்சிகளாகின்றன.

Heliconia-insects

பூக்களின் தன்மை

இந்த தாவரங்களில் கண்களை பறிக்கும் அழகோடு மலர்கள் மலர்வதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நடவு செய்த 1 வருடத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வருடம் முழுவதுமே பூத்து தன் கவர்ச்சியான மலர்களால் உங்களை திக்குமுக்காட வைப்பதில் தன்னிகரில்லாதது. அதுமட்டுமல்ல இம்மலர்கள் அதிகநாட்கள் வாடாமல் இருந்து உங்களை மகிழ்விக்கும்.

மலர்கள் உங்களை மகிழ்விப்பதெல்லாம் இருக்கட்டும்!… அதற்கு முன்னால் ஒரு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்!!…நம் கண்களுக்கு அழகிய வண்ணங்களில் மடல் மடலாக தெரிகிறதல்லவா… அவைகள் உண்மையில் மலர்களே அல்ல. அவைகள் பூக்களை பாதுகாக்கும் தடிமனான வெளிமடலாகும்.

இனங்களை பொறுத்து சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, கிரீம் என பல்வேறு வண்ணங்களில் மலர்களை பாதுகாக்கும் மடல்கள் காணப்படுகின்றன.

இந்த வண்ண மயமான மடல்களுக்குள்தான் மலர்கள் ஒளிந்திருக்கின்றன.

உதாரணமாக, வாழைப்பூவில் உள்ளே இருக்கும் பூக்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு சீப்பு பூக்களின்மேல் அடர் பிரவுன் கலரில் மடல் ஒன்று உள்ளதல்லவா அதுபோலத்தான் இதுவும்.

Heliconia_true_flower

ஒவ்வொரு மடலுக்குள்ளேயும் அதிகப்படியாக 50 பூக்கள்வரை இருக்கின்றன. ஒவ்வொரு வகைகளிலும் பூக்களின் எண்ணிக்கை வேறுபடும்.

பொதுவாக மலர்கள் வெண்மை, மஞ்சள் மட்டுமல்லாது பலவண்ணங்கள் கலந்து சித்திரம் தீட்டப்பட்டிருப்பதுமுண்டு.

இந்த ஹெலிகோனியாவில் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என பார்த்தோமல்லவா?.. ஒவ்வொரு இனங்களும் வெவ்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் மடல்களையும், பூக்களையும் தனித்துவமான வகையில் கொண்டுள்ளனவா என்றால் அதுதான் இல்லை!!.

பெரும்பான்மையான இனங்கள் வெவ்வேறு மாறுபட்ட மடல்களுடன் பூக்களை பூக்கின்றன என்றாலும் இன்னும் சில வெவ்வேறு இனங்களின் மலர்கள் ஒரேமாதிரியாக காட்சியளிப்பதும் உண்டு.

ஏனெனில் அவைகளுக்குள்ளே மிகச்சிறிய வேறுபாடுகளே உள்ளன. எனவே வெறும் மலர்களைக்கொண்டு இதன் வகைகளை வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்.

சரி, இந்த மலர்கள் அதிக நாட்கள் ஏன் வாடாமல் காட்சியளிக்கின்றன என தெரியுமா?… மலர்கள் தடித்த மஞ்சரிகளையும், மஞ்சரி மடல்களையும் கொண்டுள்ளதால் இம்மலர்கள் அதிகநாட்கள் வாடாமல் இருக்கின்றன.

அதிக நாட்கள் வாடாமல் காணப்படும் இந்த மலர்க் கொத்துகளானது பலவிதமான நீளம் மற்றும் வடிவங்களில் காணப்படுகின்றன. சில மேல் நோக்கியும், சில கீழ் நோக்கியும், இன்னும் சில கீழ்நோக்கி தொங்கியபடியும் பல வண்ணங்களில் உள்ளன.

பூக்கள் அயல்மகரந்த சேர்க்கையால் கருவுற்று முதிர்ந்து காய்களாக  மாறுகின்றன. 

இம்மலர்கள் அதிக அளவில் தேன்களையும் உற்பத்தி செய்கின்றன. மலர்களில் மதுவருந்த பெரும்பாலும் பறவைகளே வருகின்றன. “ஹம்மிங்” பறவைகள் (humming birds) பற்றி கேள்விப்பட்டியிருப்பீர்கள் அல்லவா ? … அவைகளின் மதுவருந்தும் பார்களாக இருப்பது இந்த பூக்கள்தான்.

humming birds heliconia

ஹம்மிங் பறவைகள் மட்டுமல்லாது வேறுசில சிறியரக பறவைகளும் மதுவருந்த இம்மலர்களைத்தேடி வருவதுண்டு.

அவ்வாறு தேனருந்தும்போது பறவைகளின் பல்வேறு பாகங்களில் பூவிலுள்ள மகரந்தங்கள் ஒட்டிக்கொள்வதால் இப்பறவைகளே அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.

வௌவால்கள் – அயல்மகரந்த சேர்க்கை

தென் பசிபிக்பகுதிகளில் வெள்ளை நிறமாக உள்ள வௌவால்கள் (Bats) மூலமாகவும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

சாலமன் தீவுகள் (Solomon Islands), பிஸ்மார்க் தீவுக்கூட்டங்களில் (Bismarck Archipelago) பிரபலமாக காணப்படுவது “ஹெலிகோனியா சாலமோனென்சிஸ்” (Heliconia solomonensis) என்னும் ஹெலிகோனியா ஆகும்.

இது பச்சை நிறமான பூங்கொத்து மடல்களை கொண்டுள்ளன. அந்த மடல்களுக்குள்ளேதான் சுவையான தேன்களை தேக்கி வைத்திருக்கும் பூக்கள் ஏரளமாக உள்ளன.

இதில் விசேஷம் என்னவென்றால் இது பிற ஹெலிகோனியாக்கள் போல் பகலில் பூக்காமல் இரவில் மட்டுமே பூக்கின்றன. எனவே இந்த “ஹெலிகோனியா சாலமோனென்சிஸ்” (Heliconia solomonensis) ல் பறவைகள் மூலம் மகரந்த சேர்க்கை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் இரவுவாசியான வௌவால்கள் (Bats) மூலமாக மட்டுமே மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

காய்களின் தன்மை

இதன் கருவுற்ற காய்கள் 0.5 செ.மீ விட்டம்கொண்டு முக்கோண வடிவில் காணப்படுகின்றன. காய்கள் பச்சை அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. காய்கள் முதிர்ந்து பழுக்கும்போது அமெரிக்க இனங்களில் பழங்கள் நீலநிறமாகவும், தென்பசிபிக் பகுதிகளில் உள்ள இனங்களில் சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறம் வரையில் மாற்றமடைகின்றன.

Heliconia Garden - Introduction - Part 1 fruit

பழங்கள் பறவைகளுக்கும், ஊர்வனவகை விலங்குகளுக்கும் உணவாகின்றன.

ஒவ்வொரு முதிர்ந்த காய்கள் அல்லது பழங்களினுள்ளும் விதைகள் உள்ளன. ஒரு பழத்தினுள் 1 முதல் 3 விதைகள்வரை இருக்கின்றன.

இனப்பெருக்கம்

தடித்த வேர் தண்டு கிழங்குகள் கன்றுகளை உற்பத்தி செய்கின்றன.

தண்டுகள் மட்டுமல்ல தன் இனத்தை தொலைதூரங்களுக்கு கொண்டுசெல்ல விதைகள் மூலமாகவும் இவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.

ஆம்.. வேர் தண்டு (கிழங்கு) மற்றும் விதைகள் என இருவழிகளில் இவைகள் இனவிருத்தி செய்கின்றன.

பழங்களை விரும்பி சாப்பிடும் பறவைகள் மற்றும் சிலவகை சிறிய விலங்குகளால் விதைகள் தொலைதூரங்களுக்கு கடத்தப்படுவதால் இவைகள் எளிதாக பரவுகின்றன.

விதைகள் முளைக்க 6 லிருந்து 12 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. அத்தனை மாதங்கள் பொறுமையாக காத்திருக்க முடியாது என்பதால் விவசாய துறையில் இதனை பயிர்செய்ய வேர் கிழங்குகளில் உற்பத்தியாகும் இளங்கன்றுகளை பிரித்தெடுத்து நடுவதே எளிதானதாக இருக்கின்றது.

வளரும் நிலப்பகுதிகள்

தற்காலங்களில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டுவருகிறது.

இதனை வளர்ப்பதற்கு போதிய அளவு நிலப்பரப்பு இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா?.. கவலையை விட்டொழியுங்கள். ஏனென்றால் இதில் பலவற்றை நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் உள்ள பூந்தொட்டிகளில்கூட வளர்த்துவரலாம். மலர்களுக்கும் குறைவிருக்காது, உங்கள் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

பயன்கள்

Heliconia Garden – Introduction – Part 1. ஹெலிகோனியம் மலர்கள் அவைகளின் வடிவங்கள் மற்றும் கவர்ச்சியான வண்ணங்களினால் மலர் அலங்காரங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.

மலர் அலங்காரத்திற்காக மட்டுமல்ல வீடுகள், பூங்கா மற்றும் அலுவலக முகப்புகளில் அழகுதரும் செடிகளாகவும் இது வளர்க்கப்பட்டுவருகிறது.

வெறும் அழகுதரும் செடியாக மட்டுமல்ல இந்த தாவரத்தை பழங்குடியினர் பலர் நோய்தீர்க்கும் மூலிகையாகவும் (Herbal Plants) பயன்படுத்திவருகின்றனர்.

நோய் தீர்க்கும் மூலிகையாக மட்டுமல்ல பசிதீர்க்கும் உணவாகவும் இது பயன்டுத்தப்படுகிறது. “ஹெலிகோனியா பிஹாய்” (Heliconia bihai) போன்ற சில இனங்களின் வேர்த்தண்டு கிழங்குகள் வறுத்து அல்லது சமைத்து உண்ணப்படுகிறது. இதன் இளந்தளிர்களும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

சரி,… இந்த பதிவில் ஹெலிகோனியா என்றால் என்ன… அதன் பண்புகள் என்ன? என்பதுபற்றி புரிந்துகொண்டீர்கள் அல்லவா?!… இனி தொடர்ந்து வரும் அடுத்தடுத்த பதிவுகளில் ஹெலிகோனியா [Heliconia] என்னும் பேரினத்திலுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட சிற்றினங்களைப் பற்றி தனித்தனியாக மிக தெளிவாக பார்க்க இருக்கின்றோம்.. இணைப்பில் இருங்கள்…

[தொடரும்]

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!